Visitors have accessed this post 369 times.

நானே வருவேன்

Visitors have accessed this post 369 times.

 

நானே வருவேன்

 பாகம் 1

 

 

 

வண்ண வண்ண மலர்கள்

காற்றில் ஆட
காற்றின் திசையில்
சேலை ஆட
சோலைக்குயில் கீதம் பாட
விருப்பமான மலர்களை
விரல் கொண்டு
வளைத்து உடைத்துக் கொண்டிருந்தாள்
வட்ட முகம் கொண்ட
ராகவன் மாளிகையின் ராணி செல்வி.

கையில் தேநீர் தட்டுடன் வீட்டின் வேலைக்காரி ராதா அவள் அருகில் வந்து “செல்விமா குட் மார்னிங் இந்தாங்க டீ எடுத்துக்கோங்க” என்றாள். செல்வி திரும்பி ராதாவை பார்த்து புன்னகையுடன் “குட் மார்னிங் ராதா இப்பதா டீ குடிக்கணும்னு நினைச்சுட்டே இருந்தே கரெக்டா நீ கொண்டு வந்துட்ட” , “நீங்க நெனச்ச உடனே அத செய்றதுக்கு தானம்மா நா இங்க இருக்கே” ,  “என்ன காலைலயே ஐஸ் எல்லா ரொம்ப பலம்மா இருக்கு என்ன விஷயோ” ,  “அது வந்து இன்னைக்கு சின்ன பாப்பா ஹாசினிக்கு ஸ்கூல்ல பேரன்ஸ் டீச்சர் மீட்டிங் இருக்குமா மத்தியானோ வர சொன்னாங்க நா கொஞ்சோ போயிட்டு வந்துரட்டுமா”  ,  “நீ கால டிஃபன் மட்டூ செஞ்சு வச்சுட்டு கெளம்பு மத்தியான சாப்பாட்ட நா ரெடி பண்ணிக்கிறே”  , “ரொம்ப தேங்க்ஸ்மா” என்று கூறி திரும்பிச் செல்ல பார்த்தவளிடம் “ஏ புருஷே எழுந்திருச்சுட்டாரா” என்று கேட்டாள் செல்வி. “செல்வம் ஐயா இன்னும் எந்திரிக்கலமா கொஞ்ச நேரோ கழிச்சு டீ கொண்டு வர சொன்னாரு வீர் ஐயா ஆபீஸ்க்கு போக ரெடி ஆயிட்டு இருந்தாரு மா”  ,  “சரி அந்த டீய ஏ கிட்ட குடு நா பாத்துக்குறே” என்று கூறி காலி தேநீர் குவளையை ராதாவிடம் கொடுத்துவிட்டு தேநீரை தட்டுடன் வாங்கிக் கொண்டு அதில் பறித்த மலர்கள் நிரம்பிய பூக்கூடையை வைத்து தோட்டத்தை விட்டு வீட்டிற்குள்ளே நுழைந்தாள் செல்வி.

சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கக் கூடிய அளவிற்கு நீண்ட பெரிய அளவிலான வராண்டாவின் வெள்ளை சுவற்றின் மத்தியில் பெரியதாக மாட்டப்பட்டிருந்த தன்னுடைய மாமனார் ராகவனின் தங்க முலாம் பூசப்பட்ட உருவப் படத்திற்கு முன்பு பறித்த மலர்களில் பெரும்பான்மையான மலர்களை வைத்து வணங்கி விட்டு மலைக்கு மேல் கட்டப்பட்ட கோவிலை போன்று பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருந்த நிமிர்ந்து பார்க்கக்கூடிய மேல் தளத்தின் அறைகளுக்குச் செல்லும் படிகளில் ஏறி மேல் தளத்திற்கு சென்று தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள் செல்வி.

மெத்தை மேல் முகம் உள்பட முழு உடலையும் போர்வையால் மூடிக்கொண்டு படுத்திருக்கும் தன் கணவனை பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு போர்வையை விலக்கினால் செல்வி. ஆனால் செல்வராகவனோ “நாந்தா அப்ற மேல் டீ கொண்டு வான்னு சொன்னேன்ல ராதா ஏ எ தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணீட்டு இருக்க” என்று கடுப்புடன் கூறிக் கொண்டே கண்ணை திறந்து பார்த்தார்.

எதிரே கோபத்துடன் நின்ற தன் மனைவியை பார்த்ததும் சடாரென எழுந்து நின்று “பத்ரகாளி தாயே ஏ பொண்டாட்டி கிட்ட இருந்து என்ன காப்பாத்துமா” என்று கூறி இரு கையை கும்பிட்டு வணங்கினார்.

“என்ன கிண்டல் பண்ணி சமாளிக்க பாக்காதீங்க இன்னைக்கு எவ்வளவு முக்கியமான நாள்னு உங்களுக்கு தெரியாதா? ”  ,  “தெரியலையேமா” , “என்னங்க ஒங்களுக்கு இந்த 50 வயசுலயே ஞாபக மறதி வியாதி வந்துருச்சா கடவுளே  நா என்ன பண்ணுவே”  ,  “என்னது எனக்கு 50 வயசு ஆயிடுச்சா”  ,  “கன்ஃபாமா இனி ஒங்கள ஹாஸ்பிடல்லதா சேக்கணூ”  ,  “நல்ல அழகான நர்ஸ் இருக்கிற ஹாஸ்பிடலா பார்த்து சேருமா”.

இதைக் கேட்டு கோபத்தின் உச்சிக்கு சென்று விட்ட செல்வி “மகனுக்கு பொண்ணு பாக்க வேண்டிய வயசுல ஒங்களுக்கு பொண்ணு கேக்குதா என்ன கோபப்படுத்தாம சீக்கிரமா  கெளம்பி வாங்க” என்று சொல்லிவிட்டு செல்வி வேகமாக கீழே இறங்கி சென்றுவிட “டேய் செல்வா உன் பொண்டாட்டியோட மூடு காலைலே சரியில்ல அடுத்து அவ சப்பாத்திக்கட்டையோட வர்றதுக்குள்ள சீக்கிரமா கெளம்பி கீழ போயிர்ரதுதா உனக்கு நல்லது”  என்று தனக்குத்தானே எச்சரிக்கை செய்து கொண்டு வேகமாக குளியல் அறைக்குள் நுழைந்தார் செல்வராகவன்.

வெளிர் நீல நிற சட்டையை இடது கையால் எடுத்து காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுத்து வலது கையில் மாட்டி இடது கையை அதே வேகத்தில் நுழைத்து சட்டை பட்டனை மடமடவென பூட்டி தன்னுடைய கருப்பு நிற கோட்டை எடுத்து அதே வேகத்துடன் அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு நின்றான் வீர் என்ற வீரராகவன்.

 

அவனுடைய நிறத்திற்கு அந்த உடை மிகவும் பொருத்தமாக இருந்தது. கலைந்திருந்த தன்னுடைய தலை முடியை சீப்பினால் வாரி அடங்காத சில முடிகளை கை கொண்டு நேர்த்தியாக கோதி விட்டு, அலங்கார மேஜையின் மேல் இருந்த தன்னுடைய கைக்கடிகாரத்தை எடுத்து தன்னுடைய இடது கையில் அணிந்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான் வீரராகவன்.

உணவு உண்ணும் இடத்தில் செல்வராகவனுடன் செல்வியும் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருக்க அவர்கள் அருகில் வந்த வீரராகவன் தன்னுடைய தாய் செல்வியின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தான்.

“வீர் இன்னைகி ஒனக்கு பொண்ணு பாக்க போறோம்பா நீயூ வரியா”  என்று மெல்ல தன் மகனிடம் பேச ஆரம்பித்தார் செல்வி.  “இந்த பொண்ணு கிண்ணெல்லா நீங்க போய் பாத்துட்டு வாங்கம்மா இந்த மாதிரி விஷயத்துக்கெல்லா என்ன கூப்டாதிங்க” என்று சலிப்புடன் பதில் கொடுத்தான் வீர் என்ற வீரராகவன்.

“டேய் நீ தானடா அந்த பொண்ணு கூட கடைசி வரைக்கூ வாழப் போற நீ வந்து பாத்து அந்த பொண்ணா ஒனக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு சொன்னா தான மேற்கொண்டு மத்த விஷயத்தப் பத்தி பேச முடியூ ” ,  “அம்மா நா ஓகிட்ட எத்தன தடவ சொல்றது உனக்கு ஓகேனா எனக்கூ ஓகே தா சரியா”  என்று சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து எழுந்து சென்றான் வீரராகவன்.

“என்னங்க இது?  இப்படி சொல்லீட்டுப் போறா” என்று சலிப்புடன் தன்னுடைய கணவரை பார்த்து கேட்டாள் செல்வி. “அவந்தா ஒனக்கு பிடிச்சிருந்தா சரீன்னு சொல்லிட்டான்ல எத்தன அம்மாக்களுக்கு இந்த மாதிரி சான்ஸ் கெடைக்கூ நீ ரொம்ப கொடுத்து வச்சவ செல்வி”  என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் கொடுத்தார் செல்வராகவன்.

“இந்த அப்பா பிள்ள கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாதுப்பா சீக்கிரமா இதுக்காக ஒருத்திய கொண்டு வந்தாதா நீங்க ரெண்டு பேரூ சரிப்பட்டு வருவீங்க”  என்று கூறிவிட்டு தன்னுடைய அலைபேசியை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு சற்று தள்ளி வந்து யாருக்கோ வேகமாக அழைத்தாள்.

‘எல்லா ஏற்பாடூ செஞ்சிட்டீங்களா நா சொன்ன விஷயோ எல்லா கரெக்டா இருக்கும்ல முக்கியமா அந்த பொண்ணுக்கு தங்கச்சி எதுவூ இல்லைல இந்த சித்தப்பா பொண்ணு, அத்த பொண்ணுன்னு இந்த பொண்ண விட சின்ன வயசு பொண்ணுங்க வேற யாரூ அந்த வீட்ல இல்லைல , சரி நாங்க கொஞ்ச நேரத்துல அங்க வந்துருவோ” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டு தன் நெஞ்சில் கை வைத்து நிம்மதியாக மூச்சு விட்டாள் செல்வி.

ஏன் பெண்ணிற்கு தங்கை இருந்தால் என்ன ? அந்த குடும்பத்தில் மணப்பெண்ணை விட சிறிய வயது பெண் ஏன் இருக்கக்கூடாது? மர்மத்தை தெரிந்து கொள்ள காத்திருங்கள்…

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam