Visitors have accessed this post 400 times.
பாகம் 2
செல்வராகவன் வாசலின் முன்பு வந்து நின்று ” சுரேஷ் சுரேஷ் ” என்று சத்தமாக ஓட்டுநரை அழைத்தார். ” என்னங்கய்யா ” என்று வேகமாக ஓடி வந்தார் ஓட்டுநர் சுரேஷ் . ” கார ரெடியா எடுத்து வைங்க கொஞ்சோ வெளியே போகணூ ” , ” சரிங்கய்யா ” என்று கூறிவிட்டு சுரேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார்.
தன் மனைவியைத் தேடி வீட்டுக்குள்ளே சென்ற செல்வராகவன் செல்வி பூஜை அறையில் மலர்களைக் கொண்டு அங்கிருந்த தன்னுடைய இஷ்ட விக்கிரகங்களை அலங்கரித்து மனம் உருகி வேண்டிக் கொண்டிருக்க , இதைப் பார்த்தவுடன் அங்கேயே நின்று கொண்டார் .
தன்னுடைய வேண்டுதல்களை முடித்துவிட்டு வெளியே வந்த செல்வி “ஏங்க நீங்களூ கும்பிட்டுக்கோங்க ” என்று கூற ” நா இதெல்லா விட்டு ரொம்ப நாள் ஆச்சுன்னு தெரியுல்ல திரும்பத் திரும்ப ஏ அதையே செய்ய சொல்லீட்டு இருக்க உனக்கு என்ன வேணுமோ அத வேண்டிட்டு சீக்கிரோ வா கெளம்பலா ட்ரைவர ரெடியா நிக்க சொல்லி இருக்கே” .
பிடிவாதமாக பிறங்கையை கட்டிக்கொண்டு நின்ற தன் கணவனை பார்த்து ‘ இவர திருத்தவே முடியாது ‘ என்று மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டு “சரி வாங்க போலா ” என்று செல்வி கூற வேகமாக முன்னே நடந்தார் செல்வராகவன்.
கவர்ந்திழுக்கும் கண்களுக்கு மையிட்டு , பூ போன்ற கன்னத்திற்கு பூசல்மா பொடியால் பூச்சிட்டு , வழவழப்பான உதட்டிற்கு வண்ணச் சாயம் இட்டு , மயக்கும் கூந்தலில் மல்லிகை சூட்டி , கட்சிதமான உடலில் காஞ்சிபுரம் பட்டு உடுத்தி , சங்கு கழுத்தில் தங்கச் சங்கிலிகளை மாட்டி , வளைந்தாடும் கைகளில் வைர வளையல்களை மாட்டி , மென்மையான பாதங்கள் கொண்ட கால்களில் வெள்ளி கொலுசை மாட்டி கண்ணாடி முன்பு நின்று தன்னுடைய அழகை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள் அருள் வைஷ்ணவி தம்பதியினரின் ஒரே செல்ல மகள் ரஞ்சிதா.
வாசலில் மகிழுந்து வரும் அரவம் கேட்டு ரஞ்சிதாவின் முகத்தில் வெட்கத்துடன் கூடிய புன்னகை பூத்தது. ஆவலில் ஓடிச் சென்று சாளரத்தின் கம்பிகளைப் பற்றிக் கொண்டு வாசலை எட்டிப் பார்த்தாள். தன் அப்பா அம்மா வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் பெண்ணும் மகிழுந்தில் இருந்து இறங்கி வீட்டிற்குள் வருவதை பார்த்தவள் மகிழுந்தில் இருந்து வேறு எவரேனும் இறங்குகிறார்களா என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அங்கோ ஓட்டுனர் மகிழுந்தை விட்டி இறங்கி நிற்க அவளுடைய முகத்திலிருந்த புன்னகை சட்டென மறைந்துவிட்டது.
வீட்டிற்கு வந்த செல்வராகவன் மற்றும் செல்வியை அந்த வீட்டின் தலைவர் அருள் ” வாங்க! வாங்க! ” என்று மனமாற உள்ளே வரவேற்றார். இன் முகத்துடன் உள்ளே வந்த இருவரையும் “ஒக்காருங்க” என்று பெரிய வராண்டாவில் போடப்பட்டிருந்த சொகுசு நாற்காலியை கை காட்டினார்.
அவர்கள் இருவரும் அங்கே அமர்ந்த பின்னர் தன்னுடைய மனைவி வைஷ்ணவியை ” வைஷ்ணவி மாப்ள வீட்லருந்து வந்துட்டாங்கமா ” என்று தன் மனைவிக்கு குரல் கொடுத்தார் அருள்.
உள்ளே இருந்து வெளியே வந்த இந்த வீட்டின் தலைவி வைஷ்ணவி இவர்கள் இருவரையும் பார்த்து ” வாங்க ” என்று அவர் பங்குக்கு வரவேற்று விட்டு அருளை ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்டவராய் அருள் செல்வராகவனை பார்த்து ” மாப்ள வரலைங்களா ? ” என்று கேட்டார்.
அவருக்கு பதில் கூற வாய் திறந்த தன் கணவர் செல்வராகவனை முந்திக் கொண்டு ” மூணு பேரூ சேர்ந்து வர்ரதாதா இருந்தது ஆபீஸ்ல இருந்து செக்ரட்டரி போன் பண்ணி ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு உடனே வாங்க சார்னு வீர கூப்டதுனால அவசரமா போக வேண்டிய சூழ்நிலயாயிடுச்சு ” என்று கூறினார் செல்வி.
” ஆபீஸ் மீட்டிங் எப்பவூ ப்ரீ பிளானுடா தானே இருக்கூ என்ன திடீர்னு மீட்டிங் ? ” என்று விளக்கம் கேட்டார் அருள். இதற்கு பதில் தெரியாத செல்வி தன் கணவரை பார்க்க அவர் ” ஆபீஸ் மீட்டிங்னா எப்பவூ ப்ரீ பிளானுடாதா இருக்கூ ஆனா இது ஃபாரின் கிளைன்ட் ஓட ஆன்லைன் மீட்டிங் அவங்களுக்கு ஏற்கனவே ப்ராஜெக்ட் கொடுத்தாச்சு அதுல ஒரு சின்ன கரெக்ஷன் வந்திருச்சா உங்களுக்கே தெரியூ ஃபாரின் கிளைன்ட்னா க்ளாரிட்டிய கொஞ்சோ அதிகமா எதிர்பாப்பாங்க அது எல்லாத்துக்கூ ஷூஃப் இருந்தா தானே கரெக்டா பதில் சொல்ல முடியூ ” என்று விளக்கம் கொடுத்தார்.
அவர் பதிலிலிருந்த நியாயத்தை உணர்ந்து கொண்டதால் சரி என தலையாட்டினார். ” ஏ பையே நா சொல்றத எப்பவூ தட்டவே மாட்டா நாங்க உங்க பொண்ண பார்த்து எங்களுக்கு பிடிச்சுருச்சுன்னா கண்டிப்பா வரத்தானே போறா ” என்று மாப்பிள்ளையின் தாய்க்கு உரிய தோரணையுடன் கூறினாள் செல்வி.
” பொண்ணோட போட்டோவ மட்டூ மாப்ள பாத்திருந்தார்னா இந்நேரோ மீட்டிங்க கேன்சல் பண்ணிட்டு கண்டிப்பா இங்க வந்துருப்பாரு நீங்கதா போட்டோவே வேணான்னு சொல்லீட்டீங்களே ” என்று குறைபட்டுக் கொண்டாள் வைஷ்ணவி. “இந்த காலத்துல போட்டோவ எப்படி எப்படியோ மாத்தி கொடுத்துற்றாங்க நாங்க அத பாத்து புடிச்சிருக்குன்னு சொல்லீட்டு இங்க வந்து பாத்து புடிக்கலன்னு சொல்லீட்டா ஒங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குல்ல அதனாலதா எதா இருந்தாலூ நேரா பாத்து முடிவெடுத்துக்கலாம்னு புரோக்கர் கிட்ட சொல்லிட்டே ” என்று சற்று தயக்கத்துடன் கூறினாள் செல்வி.
பெண்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சலைத்தவர் அல்ல என்பது போல் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருக்க ஆண்கள் இருவரும் என்ன செய்வது என்பது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அருள் சட்டென ” அதுவூ சரிதா ” என்று கூறி இருவருக்கும் இடையேயான வாதத்தை முடித்து வைத்தார்.
அதை புரிந்து கொண்ட வைஷ்ணவி ” காஃபி சாப்புட்றிங்களா? டீ சாப்புட்றிங்களா ? ” என்று செவ்வியை பார்த்து கேட்டார். ” மொதல்ல பொண்ண பாத்துருவோமே ” என்று செல்வராகவும் செல்வியும் ஒரே ஸ்ருதியில் கூற வைஷ்ணவி ” ரஞ்சிதா ” என்று தன் மகளுடைய அறையை நோக்கி அழைத்தாள். அறையிலிருந்து எந்த பதிலும் வராமல் இருக்கவே சத்தமாக மீண்டும் ” ரஞ்சிதா ” என்று அழைத்தாள்.
இந்த முறையும் எந்த பதிலும் வராமல் இருக்கவே நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சற்று பதற்றத்துடன் ” ரெடியாயிட்டுதா இருந்தா வாஸ் ரூம்ல இருக்கா போல நா போய் என்னன்னு பாத்துட்டு வரே ” என்று வேகமாக சென்றவள் ” இருங்க நானூ வரே ” என்ற செல்வியினுடைய குரலில் அப்படியே நின்றாள். என்ன செய்வதென்று தெரியாமல் தன் கணவர் அருளைப் பார்த்த வைஷ்ணவியிடம் “கூட்டிட்டு போமா ” என்று பொறுமையாக பதில் கொடுத்தார் அவர்.
அவரை கூட்டிக்கொண்டு தன் மகளுடைய அறைக்குச் சென்ற வைஷ்ணவி சிறு பதட்டத்துடனே அறையைத் திறந்தார். அங்கே ரஞ்சிதா இல்லாததைக் கண்டு மேலும் அவருக்கு பதட்டம் அதிகரிக்க செல்வியின் முகத்தை பார்த்து வராத சிரிப்பை முகத்தில் காட்டி ” உள்ளதா இருப்பா வாங்க ” என்று முன்னே நடந்தாள் வைஷ்ணவி.