Visitors have accessed this post 746 times.

மனைவியை அடக்கி ஆள்வது எப்படி?

Visitors have accessed this post 746 times.

     சோமசுந்தரம் ஒரு சிவபக்தர், அவர் ஊரிலேயே பெரிய பண்ணை, ஊரிலே அவரைத் தெரியாத ஆட்கள் இல்லை, ரைஸ் மில் சோமசுந்தரம் என்றால் ஊரே அலறும், ஆனால் வீட்டில் பெண்டாட்டியிடம் மரியாதை இல்லை, திருமணமாகி 5 வருடமாக குழந்தை இல்லை. டாக்டரும் இருவருக்கும் எவ்வித குறையும் இல்லை என்று சொல்லிவிட்டார், செய்யாத செலவு இல்லை, ஏறாத கோவில் இல்லை, பேச்சுவாக்கில் ஒரு நாள் அவர் மனைவி தெய்வ நாயகி “நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா என்று கேட்டு விட்டாள், சோமசுந்தரத்திற்கு ‘சுருக்’ என்று தைத்துவிட, பளார் என்று இரண்டு அறை விடப் போய், அதையே ஓயாமல் பிடித்துக் கொண்டு, தாக்கத் தொடங்கி விட்டாள். எவ்வளவு சமாதானப் படுத்தியும் அவள் அடங்குவதாகத் தெரியவில்லை. சாடைமாடையாகத் திட்டுவதோடு அல்லாமல், நாலுபேர் முன்னாடியே வம்பிற்கு இழுக்கிறாள், விஷயம் வேலையாட்களுக்கு பரவி வெளியாட்கள் வரை பரவ ஆரம்பித்து, ஒரு சிலர் நேரடியாக விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒருமுறை அடித்ததற்கு 40 முறையாவது நீ ஒரு ஆம்பிளையா கேட்டு விட்டாள். இனி ஒரு முறை கை நீட்டி விட்டால் நிச்சயம் விட்டை விட்டு வெளியேறி விடுவாள். குடும்ப மானம் காற்றில் கரைந்து விடும். என்ன செய்வது?

ஊரையே அடக்கி ஆண்டவன் பெண்டாட்டியிடம் கேவலப் பட்டு வாழ்கிறான், குழந்தை பெத்துக்க தகுதி இல்லாதவன் ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டியது தானே? என்று சாடை மாடையாக நெருங்கிய வட்டாரம் பேசத் துவங்க, சோமசுந்தரத்திற்கு நாண்டு கொண்டு சாகலாம் போல் இருந்தது.

     அன்று இரவு அவர் வீட்டிற்கு திரும்பாமல் அவருக்குப் பிடித்த ஊருக்கு வெளியில் உள்ள சிவன் கோவிலுக்கு வந்து விட்டார். அவர் சிவலிங்கத்தைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார், நான் என்ன பாவம் செய்தேன், ஆண்டவா! எனக்கு நீ விடை சொல்லாமல் நான் திரும்பப்போவதில்லை என்று கதறினார். அவர் எவ்வளவு நேரம் அழுதார் என்பது தெரியாமலேயே தூங்கிப் போனார். திடீரென தன்னை யாரோ தொடுவதை உணர்ந்தார், அவர் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தபோது சாட்சாத் அந்த சிவ பெருமான் எதிரில் நின்றிருக்கக் கண்டார். மெய்சிலிர்த்துப் போய் பணிவுடன் அவரை வணங்கினார். ஐயனே என் நிலையைப் பார்த்தீர்களா? நீங்கள்தான் எனக்கு விடுதலை தர வேண்டும் என்று காலில் விழுந்தார்.

      தினம் தினம் எனைப் படுத்தி எடுக்கிறாள் இறைவா, என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை என்றார். நான் என செய்ய வேண்டும் சோம சுந்தரம் என்று சிவன் கேட்டார். அவள் என்னோடு சண்டை போடுவதை நிறுத்த வேண்டும்  என்றார், சிவன் சிரித்துக் கொண்டே திருமணத்திற்குப் பின் நடக்கும் ஒவ்வொரு ஊடலும், கூடலின் பற்றாக் குறையால்தான் நடக்கிறது என்பதை புரிந்து கொள் சோம சுந்தரம்” என்றார். ஐயனே அவளுடனா? அவளோடு யாருமே குடும்பம் நடத்த முடியாது என்றார் திட்டவட்டமாக, சிவபெருமான் சிரித்து விட்டார், தேவர் முதல் மனிதர் வரை பெண்களால் ஏற்படும் பிரச்சனைகளை கடந்துதான் தீர வேண்டும் யாருக்குத்தான் பிரச்சனை இல்லை என்றார். ஐயனே பார்கடலில் பள்ளி கொண்ட விஷ்ணுவின் காலை மகாலஷ்மி பதமாக அமுக்கிவிட அவர் எவ்வளவு சுகமாக உறங்கிக் கொண்டிருக்கிறார் என்றார், பக்தா அவன் நிலை தெரியாமல் பேசாதே, எங்கே கண்களைத் திறந்து விட்டால் மகாலஷ்மியை மணந்து கொள்ள வேன்டியதாக இருக்குமே என்று  அவன் தூங்குவதை போல் நடித்துக் கொண்டிருக்கிறான், சரி ஐயனே கிருஷ்ணர் செய்யாத லீலைகளா, பக்தா அவன் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தவிர காதல் மன்னன், எந்தப் பெண்ணிடமும் குடும்பம் நடத்தி கஷ்டப் பட்டதில்லை என்றார். சோமசுந்தரத்திற்கு தலை சுற்றியது, ஐயனே நான் சன்யாசியாகி விடுகிறேனேஎன்றார்.

” பக்தா ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று இரண்டு மனிதர்களைத் துரத்துகிறது, ஒருவன் அதிக ரத்த காயங்களுடன் தப்பி ஒரு மரத்தில் ஏறி சிங்கம் வந்தால் கொன்றுவிடுமே என்ற பயத்தில் கீழிறங்க பயந்து உணவில்லாமல் செத்துப் போகிறான், இன்னொருவன் அந்த சிங்கத்திடம் பழகி அதன் மேலமர்ந்து உலா வருகிறான். இதில் யார் புத்திசாலி என்று கேட்டார். உடனே சோமசுந்தரம் இரண்டாமானவந்தான் என்றார், அதற்கு சிவன் முதலாமானவன் வாழ்க்கைக்குப் பயந்து ஓடிய சன்யாசி, இரண்டாமானவன் மனைவியை ஜெயித்த வீரன், நீ வீரனாக இரு என்றார். 

     ஐயனே எனை மன்னித்து விடுங்கள் அவளோடு குடும்பம் நடத்த என்னால் முடியாது என்றார், “சோம சுந்தரம் என் கதையை சொல்கிறேன் கேள், ஒருமுறை அசுரர் குல தலைவனை காளி அவதாரமெடுத்து அவன் ரத்த்ம் குடித்து அவனை அழிக்கும் சக்தியாக மாறிய போது அவளின் ஆக்ரோஷம் அடங்கவில்லை, அவள் கண்ணில் பட தேவர்களும் பஸ்பமானார்கள், அவளது ருத்ரதாண்டவத்தில் அண்டம் பிளந்து அனலில் தத்தளித்தது, யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை, ஆதி சக்தியே அழிவு சக்தியாக மாறினால் யாரால் தடுத்து நிறுத்த முடியும். நான் வேறு வழி தெரியாமல், அவள் பாதத்தில் சரணடைந்தேன். என்னை ஒரு காலில் மிதித்து வதம் செய்ய சூலம் ஏந்தியவள், அண்ட சராசரத்தின் தலைவன், தன் கணவன், கால்களில் வீழ்ந்திருக்கிறானே என்றெண்ணி ஒரு கணம் தாமதித்தாள், உடனே சாந்த சொரூபியானாள். ஒரு பெண்ணானவள் தன் கணவன் மீது கொண்ட அன்பின் காரணமாக அடி பணிவாளே தவிர, அண்டத்தைக் காப்பவளாகவும், அழிப்பவளாகவும் இருக்கும் ஆதி பராசக்தியை யாராலும் ஆணவத்தால் ஜெயிக்க முடியாது. நீ உன் மனைவியை ஜெயிக்க வேண்டுமானால் உனது தூய்மையான அன்பைத் தவிர வேறு எந்த ஆயுதத்தாலும் வெல்ல முடியாது போய் வா” என்று மறைந்தார் சிவபெருமான். சட்டெனக் கண் விழித்தார் சோமசுந்தரம். இறைவன் அங்கே சிலையாக இருந்தார். நடந்தது கனவா அல்லது நினைவா என்று தெரியவில்லை. ஆனால் மனத் தெளிவுடன் இறைவனுக்கு நன்றி கூறி வீட்டுக்குப் புறப்பட்டார் சோம சுந்தரம். நல்லது, நாம் வேறொரு தலைப்புடன் மீண்டும் சந்திக்கலாமா…வாழ்க வளமுடன்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam